வடகொரியா ஏவுகணை சோதனை தோல்வி – டொனால்ட் டிரம்ப் கண்டனம்

0
105

வாஷிங்டன்: நெருங்கிய நட்பு நாடான சீனாவின் வேண்டுகோளையும் நிராகரித்து, வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.     

அண்டை நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வட கொரியா அடிக்கடி தொலைதூர ஏவுகணையும், அணு ஆயுதங்களையும் சோதனை செய்து வருகிறது. சமீபத்தில் தனது நிறுவனரின் பிறந்த நாளை முன்னிட்டு பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பை நடத்தியது. ராணுவ தின நிகழ்ச்சியில் வட கொரிய டாங்குகள் குண்டு மழை பொழிந்து சாகசத்தை நிகழ்த்தி காண்பித்தன.

இந்நிலையில், வடகொரியா நேற்று மீண்டும் தொலைதூர ஏவுகணையை புக்சாங் விமான தளத்தில் இருந்து ஏவியது. ஆனால் இந்த ஏவுகணை வடகொரியா நிலப்பகுதியை தாண்டவில்லை. அமெரிக்க பசிபிக் கட்டுப்பாட்டு மையம் இத்தகவலை உறுதி செய்துள்ளது. கே.என் 17 ரக ஏவுகணைகளை வடகொரியா சோதித்து பார்த்து இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் டிவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘‘சீனாவின் விருப்பத்தையும், சீன அதிபரின் வேண்டுகோளையும் வடகொரிய மதிக்கவில்லை’’ என கூறியுள்ளார். அமெரிக்க பசிபிக் கட்டுப்பாட்டு மையம் விடுத்துள்ள செய்தியில், ‘‘எங்களின் நட்பு நாடுகளான தென் கொரியாவையும், ஜப்பானையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது’’ என்றார்.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நேற்று முன்தினம் பேசிய அமெரிக்க அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், ‘‘வடகொரியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதோ, வட கொரியா மக்களை மிரட்டுவதோ அல்லது ஆசிய பசிபிக் பகுதியில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்துவதோ அமெரிக்காவின் நோக்கம் அல்ல. பொறுமை கொள்கை முடிந்து விட்டது. இனிமேலும் பொறுமை காத்தால், வடகொரியாவின் அணுசக்தியை ஏற்றுக் கொண்டதாகிவிடும். ஏவுகணை சோதனைவடகொரியா மீதான ராணுவ நடவடிக்கைக்கு அதிக வாய்ப்புகள் உள்ளது’’ என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com