பொத்துவில் மக்கள் நன்மை அடையும் விதத்தில் நீண்டகால அபிவிருத்தித் திட்டங்கள் கிழக்கு எதிர்க்கட்சித் தலைவர்

0
22

பொத்துவில் மக்கள் நன்மை அடையும் விதத்தில் நீண்டகால அபிவிருத்தித் திட்டங்களை தேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவும் நானும் இணைந்து மேற்கொண்டுள்ளோம் என கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவரும், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

பொத்துவில்

பொத்துவில் துவ்வையாற்றை அகலப்படுத்தி, சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய காங்கிரஸிடம் அரசியல் அதிகாரம் இருக்கும் காலமெல்லாம் பொத்துவில் பிரதேச மக்களிடம் உண்மைக்குண்மையான அன்பு வைத்து அவர்களுக்கான முக்கியமான துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. எங்களால் முடிந்தளவு இப்பிரதேச மக்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வழங்கியுள்ளோம்.

நீண்ட காலமாக துவ்வையாறு அகலப்படுத்தி சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்காணிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. நமது விவசாயிகளுக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டதுடன் சர்வோதயபுரம், சின்னஉல்லே, பசறிச்சேனை போன்ற பிரதேசங்கள் வெள்ளம் ஏற்படும் காலத்தில் பாதிக்கப்பட்டன. இப்பிரதேசங்களில் அமைந்துள்ள வீதிகள் ஒவ்வொரு வருடமும் மழை காலத்தில் சேதமடைந்தன.

பொத்துவில்

இவ்வெள்ளம் ஏற்பட்டு இப்பிரதேச விவசாயக் காணிகளும், கிராமங்களும் பாதிப்படைவதற்கான காரணங்கள் என்ன என்பதனை ஆராய்ந்து பார்த்த போது துவ்வையாற்றில் விழுந்துள்ள மரங்களும், சேகரிக்கப்பட்ட நிலையில் உள்ள ஆற்று மண்ணும் நீர் ஓட்டத்தைத் தடுப்பதனால் வெள்ளம் ஏற்படுகிறது என அறியமுடிந்தது.

மத்திய நீர்ப்பாசன திணைக்களமும், கிழக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களமும் இணைந்து இவ்வேலைத்திட்டத்தை நிறைவு செய்வதற்காக பொத்துவில் பிரதேசத்தில் நீர்ப்பாசன வாரம் ஒன்றை அமுல்படுத்தி இப்பிரதேசத்தின் நீர்ப்பாசனத் திட்டங்களை ஆரம்பித்துவைத்தோம்.

துவ்வையாற்றின் 03ஆம் பகுதியான பசறிச்சேனைப் பாலத்தில் இருந்து முகத்துவாரம் வரை அகலப்படுத்தி சுத்தமாக்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்படுகிறது. இத் திட்டம் நிறைவு பெற்றதும் இப்பிராந்தியத்தின் விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டங்களும், கிராமங்களுக்கு ஏற்படும் நஷ்டங்களும் இல்லாமல் செய்யப்படும்.

இவ்வாறான வேலைத்திட்டங்களை செயற்படுத்தும்போது மக்களின் நன்றியை எதிர்பார்க்காது இறைவனின் கூலி இவ்வாறான திட்டங்களுக்கு உதவி புரிந்த நம் எல்லோருக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் செயற்பட வேண்டும் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com