புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை: மூன்று தமிழ் நீதிபதிகள் தீர்ப்பாயம் முன்பாக யாழில் வழக்கு விசாரணை

0
307
Want create site? Find Free WordPress Themes and plugins.

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மூன்று நீதிபதிகள் தீர்ப்பாயம் (ட்ரயல் அட் பார்) முன்னிலையில் இடம்பெறவுள்ளது. இதற்கான பரிந்துரையைப் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் வழங்கினார்.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் தலைமையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் ஆகியோர் தீர்ப்பாயத்தின் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து மிக விரைவில் வழக்கு விசாரணைகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

புங்குடுதீவு மாணவி வித்தியா 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்குச் சென்றவேளை கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வின் பின்பு படுகொலை செய்யப்பட்டார். மாணவியின் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் 12 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் அரச சாட்சியாக ஊர்காவற்றுறை நீதிவான் மன்றில் உறுதியுரை செய்தார். மேலும் இருவர் வழக்கோடு தொடர்புபட்டவர்கள் அல்லர் என்ற அடிப்படையில் அண்மையில் விடுவிக்கப்பட்டனர்.

ஏனைய 9 சந்தேகநபர்களும் கடந்த இரண்டு வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக 41 குற்றச்சாட்டுகள் சட்டமா அதிபர் திணைக்களத்தால் முன்வைக்கப்பட்டுள்ளன. வழக்கில் 23 பேர் சாட்சிகளாக இணைக்கப்பட்டுள்ளனர்.

9 சந்தேகநபர்களுக்கும் எதிரான குற்றப்பத்திரிகை கடந்த 12ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அது தற்போது மேல் நீதிமன்றப் பதிவாளரின் பாதுகாப்பில் இருப்புப் பொட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை தீர்ப்பாய முறையில் நடத்துமாறு சட்டமா அதிபர் திணைக்களம் கோரியிருந்தது. அதன்படி பெரும்பான்மை இன மேல் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் கொழும்பில் அதனை நடத்துவதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டது. எனினும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் யாழ்ப்பாணம் தீவக மக்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளையடுத்து வழக்கு விசாரணை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தமிழ் பேசும் மேல் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை யாழ்ப்பாணத்தில் நடத்த வலியுறுத்தி அடையாள உண்ணாவிரதப் போராட்டம் உள்ளிட்ட கவனயீர்ப்புப் போராட்டங்கள் புங்குடுதீவு மக்களாலும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களாலும் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments