பாரிய வேலைநிறுத்த போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் : வைத்திய அதிகாரிகள் சங்கம்

0
21

சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரித் தொடர்பில் அரசு உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்காது தொடர்ந்து அசமந்த போக்கவில் செயற்பட்டு வருவதால் எதிர்வரும் நாட்களில் பாரிய வேலைநிறுத்தப் போராட்டங்களை முன்னெடுக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று கொழும்பில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை அரசுடமையாக்குமாறு வலியுறுத்தி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்து வருகிறது. டெங்கு நோய் தொற்று நாட்டில் அதிகரித்துள்ள சூழலில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொடர்ச்சியான பணிப்பகிஷ்ரிப்பு சுகாதார துறையை பெரிதும் பாதித்துள்ளது.

அண்மையில் அனைத்துப் பல்கலைகழக மாணவர்கள் சுகாதார அமைச்சை முற்றுகையிட முனைந்த போது பொலிஸார் இவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து சைட்டம் விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இந்நிலையில், மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு உரித்தான நெவில் பெர்ணாந்து வைத்தியசாலை அரசுடமையாக்கப்பட்டுள்ளதுடன், சைட்டத்தின் நிர்வாகத்தை விரிவாக்குவது தொடர்பில் அரசு கலந்துரையாடிய வருகிறது.

மேற்படி கலந்துரையாடல்களின் பின்னர் ஜனாதிபதி தலைமையில் கூடி இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ள நிலையிலேயே நேற்று வைத்திய அதிகாரிகள் சங்கம் கூடி சமகால விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியது. கலந்துரையாடலில், அரசு சைட்டம் விவகாரத்தில் உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்காது அசமந்தப் போக்கில் செயற்படுவதாக சுட்டிக்காட்டி, எதிர்வரும் நாட்களில் பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தயாராகிவருவதாக வைத்தியர் சங்கம் அறிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement