பணிப்பெண்களாக மலையகப் பெண்கள் செல்வதை தடுத்து நிறுத்துவோம் : திலகர் அரைகூவல்

0
83
வெளிநாட்டுப் பணிப்பெண்களாக மலையகப் பெண்கள் செல்வதை தடுத்து நிறுத்துவோம் : திலகர் எம்.பி அரைகூவல்
இலங்கைக்கு பெயர் எடுத்துக்கொடுத்திருப்பது தேயிலை. தேயிலை ஏற்றுமதி மூலமே இலங்கையின் அந்நிய செலாவணி வருமானம் ஒருகாலத்தில் முதலாம் இடத்தில் இருந்தது. இன்று தேயிலை ஏற்றுமதி வருமானம் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கின்றது. ஆனால், வெளிநாட்டுக்கு பணிப்பெண்களாக வேலைக்குச் செல்வோர் அனுப்பும் பணமே இலங்கையின் முதலாவது அந்நிய செலாவணி வருமானத்தைப் பெற்றுத்தருகிறது என்று நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்தார்.
அத்துடன், மலையகப் பெண்களும் பணிப்பெண்களாகச் சென்று இதற்க பங்களிப்புச் செய்கின்றனர். ஆனால் , வருமான மூலம் பல்வேறு சமூக உளவியல் சிக்கல்களைக் கொடுக்கின்றது. எனவே,  வெளிநாட்டுப் பணிப்பெண்களாக மலையகப் பெண்கள் செல்வதை நிறுத்துவோம் என்றும் அவர் கூறினார்.
தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர்  தேசிய முன்னணியின் மகளிர் அணியினரின் மகளிர் தினக் கொண்டாட்டங்களின் முதலாம்  நிகழ்வு “உறவுக்கு கைகொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம்’ எனும் தொனிப்பொருளில் நுவரெலியா பரிசுத்த திரித்துவ கல்லூரி மண்டபத்தில் மகளிர் அணித்தலைவியும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான திருமதி.சரஸ்வதி சிவகுரு தலைமையில் இடம்பெற்றது.  திலகர் எம்.பி
 இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் அவர் இவ்வாறு கூறினார்
பெண்கள் பொதுவாழ்வில் ஈடுபடும்போது பல்வேறு சவால்களை சந்திக்க நேரிடும். அதுபோலவே மறுபுறத்தில் ஆண்கள் பொதுப்பணிகளில் ஈடுபடுவதற்கு அவர்களின் பல்வேறு சுமைகளை தாங்கள் தாங்கிக்கொள்வதன் ஊடாகவும் பெண்கள் பொதுவாழ்க்கைக்கு பங்களிப்பு செய்கின்றார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் பொதுப்பணிகளில் ஈடுபடும்போது குடும்பத்தில் ஏற்படுகின்ற வெற்றிடத்தை எங்கள் குடும்பத் தலைவிகளே ஏற்கின்றனர்.
அவர்கள் குடும்ப நிர்வாகத்தைப் பொறுப்பேற்றுக்கொள்ளாத பட்சத்தில் ஆண்களுக்கும் பொதுப்பணிகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபடுவது சவாலானதே. அந்த வகையில் பொதுப்பணிகளில் ஈடுபடுவோரின் குடும்பத்தலைவிகள் தாய்மார் போற்றுதற்குரியவர்கள். எனவே அந்த உறவுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்.
இலங்கையின் தேயிலை எற்றுமதியில் அதிக வருமானம் ஈட்டியபோது அதில் நமது பெண்களே அதிகம் பங்கு வகித்தனர். இன்று தேயிலைத் தொழில்துறை வீழ்ச்சி அடைய தேயிலைக்கு பதிலாக அந்தப் பெண்களையே  வெளிநாட்டு பணிப்பெண்களாக ஏற்றுமதி செய்து வருமானம் தேடும் துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அடுத்த மகளிர் தின விழாவின்போது இதனைக் கணிசமாக குறைக்கும் திடசங்கட்பத்தை நாம் கொள்ள வேண்டும். வெளிநாட்டுப் பணிப்பெண்களாக மலையகப் பெண்கள் செல்வதை நிறுத்துவோம் மாற்று வாழ்வாதாரத்தை கண்டடைவதற்கு ஒன்றிணைந்து செயற்படுவோம் எனவும் கூறினார்.

Comments

comments