சென்னையில் திருவையாறு

0
143

தொன்மையான நாகரீகத்திலும், கலாச்சாரத்திலும், கலைகளிலும் உலகத்திற்கே முன்னோடியான நமது இந்திய தேசத்தில் எண்ணற்ற கலைகள் தோன்றி மக்களை மகிழ்வித்து சென்றிருக்கின்றன. அவ்வாறாக தோன்றிய அருங்கலைகளில் இன்றும் உயிர்ப்போடு காண்போரையும், கேட்போரையும் பரவசப்படுத்துகின்ற ஒன்று என்று சொன்னால்  தென்னிந்தியாவின் “கர்நாடக சங்கீதம்” என்பதை யாரும் மறுக்க  இயலாது.

அவ்வரிய முக்கியமானதும் முதன்மையானதுமான கர்நாடக சங்கீதத்திற்கென்று அனைத்து தரப்பு ரசிகர்களுடன் இளம் தலைமுறையினரும் ஆவலோடு கலந்து கொள்ளக்கூடிய வகையில் புதிய பரிமாணத்தில் கடந்த பதினோரு வருடங்களாக “சென்னையில் திருவையாறு” என்கிற விழாவினை “லஷ்மன் ஸ்ருதி இசையகம்” (Lakshman Sruthi Musicals) வெகு விமரிசையாக நடத்தி வருகிறது.

இசை ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கலைஞர்களைத் தேர்வு செய்து காண்போரையும் கேட்போரையும் கனவுலகிற்கே அழைத்துச் செல்லும்  முயற்சிதான் “சென்னையில் திருவையாறு” விழா!

ஒவ்வொரு ஆண்டின் நிறைவிலும் சென்னை மாநகரத்தில்  நிகழக்கூடிய தரமான, அழகான, முழுமையான இசை விழாவாகவும், சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகவும் “சென்னையில் திருவையாறு” விழா திகழ்கிறது.

இந்த விழா பற்றி லஷ்மன் ஸ்ருதி குழுவினர் கூறுகையில் ……

”லஷ்மன் ஸ்ருதி இசையகம்” (Lakshman Sruthi Musicals) சார்பாக கடந்த 2005 ஆம் ஆண்டு ஒரு கர்நாடக சங்கீத விழாவை நடத்த ஆலோசனை செய்தபோது, தமிழகத்தில் நடைபெறும் இசைவிழாக்களிலிருந்து சற்றே வித்தியாசமாகவும், தனித்துவத்துடனும் நடத்த வேண்டும் என்று திட்டமிட்டோம். அந்த விழாவின் துவக்கமே புதிதாய், நமது கலாசாரத்துடன் ஒட்டியதாய், அனைவரது மனமும் இசையோடு ஒன்றி, அமைதியும் ஆனந்தமும் பெறுகின்ற வகையில் அமைய வேண்டும் என்று சிந்தித்தோம்.

திருவையாறு தியாகராஜரின் ஸ்தலத்தில் வருடந்தோறும் இசைக்கலைஞர்கள் ஒன்றுகூடி, அவர் இயற்றிய பஞ்சரத்ன கீர்த்தனைகளை தெய்வீக உணர்வோடு பாடுகிறார்கள். அந்த இனிய உணர்வுமிக்க இசை அலையை ஏன் சென்னைக்குக் கொண்டு வரக்கூடாது என்று எங்களுக்குள் விவாதித்தோம்.

அப்போது திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவைப் போலவே ஒரு விழாவை சென்னை மக்கள் கண்டுகளிக்கும்படி  உருவாக்க எண்ணினோம். இதன் விளைவாகவே ஶ்ரீதியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகளோடு இசை விழாவைத் துவங்குவதென்றும், அந்த விழாவுக்கு “சென்னையில்-திருவையாறு” என்று பெயர் சூட்டுவதென்றும் முடிவு செய்தோம்.

திருவையாறில் தியாகராஜ ஆராதனை விழாவுக்கு நேரில் சென்று காண இயலாத இசை ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் “சென்னையில் திருவையாறு” துவக்க விழா நிகழ்வில் கலந்து கொண்டு பஞ்சரத்ன கீர்த்தனைகளைக் கேட்டு இறைவனருள் பெற வேண்டுகிறோம். இந்நிகழ்விற்கு அனுமதி இலவசம்

 

 

Comments

comments