ஏறாவூர் இரட்டைப் படுகொலை விசாரணையை ‘சிஐடி’யிடம் கையளிக்க நீதிபதி உத்தரவு

0
29

ஏறாவூர் இரட்டைப் படுகொலை விசாரணையை ‘சிஐடி’யிடம் கையளிக்க நீதிபதி உத்தரவு

இரட்டைப் படுகொலை

ஏறாவூர் இரட்டைப் படுகொலை விசாரணையை ‘சிஐடி’யிடம் கையளிக்க ஏற்ற ஒழுங்குகளைச் செய்யுமாறு கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு நீதிபதி உத்தரவு

மட்டக்களப்பு ஏறாவூர் நகரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி இடம்பெற்ற தாய் மற்றும் மகள் இரட்டைப் படுகொலை வழக்கு விசாரணை, புதன்கிழமை மாலை 4 மணியளவில் 06.12.2017 ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இவ்வேளையில் படுகொலை செய்யப்பட்டவர்களில் ஒருவரான ஜெனீராபானுவின் கணவரான ஐ.எம். மாஹிர் தனது தரப்பு சட்டத்தரணியுடன் நீதிபதியின் முன் ஆஜராகி மேற்படி படுகொலை வழக்கு விசாரணையை பொலிஸாரிடமிருந்து புலனாய்வுத் துறைக்கு பாரப்படுத்துமாறு வேண்டுகோளை முன்வைத்திருந்தார்.

கடந்த 15 மாதங்களுக்கு மேலாக இடம்பெற்று வரும் இந்த வழக்கு விசாரணையில் பாதிக்கப்பட்ட தமது தரப்புக்கு திருப்தியில்லாதிருப்பதாக அவர் தனது வேண்டுகோளை சட்டத்தரணிகள் ஊடாக நீதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி விசாரணையை குற்றப்புலனாய்வினருக்கு (சிஐடி) கையளிப்பதற்கான ஏற்ற ஒழுங்குகளைச் செய்யுமாறு கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டதுடன் வழக்கை அடுத்த ஆண்டு 2018 ஜனவரி மாதம் 12ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

படுகொலைச் சந்தேக நபர்களில் இருவர் மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகளால் ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (டிசம்பர் 06, 2017) ஆஜர் செய்யப்பட்ட அதேவேளை பிணையில் விடுதலையான ஏனைய நால்வரும் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகியிருந்தனர்.

இவ்வேளையில் ஐந்தாவது சந்தேக நபரான பள்ளியடி வீதி, காவத்தமுனை, ஓட்டமாவடியைச் சேர்ந்த புஹாரி முஹம்மது அஸ்ஹர் (வயது 23) என்பவரை பிணையில் செல்ல அனுமதித்த நீதிபதி. ஏறாவூர், அப்துல் மஜீத் மாவத்தை ஐயங்கேணியைச் சேர்ந்த வசம்பு என்றழைக்கப்படும் உஸனார் முஹம்மது தில்ஷான் (வயது 29) என்பவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

ஏறாவூர் நகர பிரதேசத்தில் முகாந்திரம் வீதி முதலாவது குறுக்கு ஒழுங்கையிலுள்ள வீட்டில் வசித்துவந்த தாயான நூர்முஹம்மது உஸைரா (வயது 56) அவரது திருமணமாகிய மகளான ஜெனீராபானு மாஹிர் (வயது 32) ஆகியோர் கடந்த வருடம் (2016) செப்ரெம்பெர் 11ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களும் கடந்த 2016 வருடம் செப்ரம்பர் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக ஒருவருடம் நீடிக்கப்பட்டு வந்த விளக்கமறியல் உத்தரவில் இருந்து வந்த நிலையில் அவர்களில் இருவர் இவ்வருடம் செப்ரெம்பெர் மாதத்திலும் மற்றைய இருவரும் ஒக்ரோபர் மாதத்திலும் மேலும் ஒருவர் டிசம்பர் 06ஆம் திகதியும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஏறாவூர் காட்டுப்பள்ளி வீதியைச் சேர்ந்த அபூபக்கர் முஹம்மது பிலால் (வயது 50), ஏறாவூர் ஆதார வைத்தியசாலை பின் ஒழுங்கையைச் சேர்ந்த இஸ்மாயில் முஹம்மது பாஹிர் (வயது 25), ஏறாவூர் நகர் போக்கர் வீதியைச் சேர்ந்த இஸ்மாயில் சப்ரின் (வயது 30), பாடசாலை வீதி மீராகேணியைச் சேர்ந்த கலீலுர் ரஹ்மான் அஹம்மது றாசிம் (வயது 23) பள்ளியடி வீதி, காவத்தமுனை, ஓட்டமாவடியைச் சேர்ந்த புஹாரி முஹம்மது அஸ்ஹர் (வயது 23) ஆகியோரே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement