உள்ளுராட்சிசபைத் தேர்தலானது வட்டார முறையிலும் விகிதாசார பிரதிநிதித்துவம் கலந்த முறையிலும்

0
37

அடுத்த உள்ளுராட்சிசபைத் தேர்தலானது வட்டார முறையிலும் விகிதாசார பிரதிநிதித்துவம் கலந்த முறையிலும் நடைபெறவிருக்கின்றது.

மட்டக்களப்பு செங்கலடியில் 46 இலட்சம் ரூபா நிதியில் அமைக்கப்படவுள்ள பொதுச்சந்தைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஏறாவூர் பற்று பிரதேச சபை செயலாளர் கே.பேரின்பராஜா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே. சித்திரவேல் அதிகாரிகள் நாட்டி வைத்தனர்.

நிகழ்வில் உரையாற்றிய சித்திரவேல், ஏறாவூர் பற்று பிரதேச சபைப்பிரிவிலே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும் வருமானத்தை ஈட்டித்தருவதும் செங்கலடி பொதுச்சந்தையாகும்.

இதிலே நூற்றுக்கு மேற்பட்ட வியாபாரிகள் தங்களது வர்த்தகத்தைச் செய்து வருகின்றார்கள்.

அந்த வகையிலே மிகவும் வசதிகுன்றிய நிலையில் காணப்பட்ட இச் சந்தைக் கட்டிடத்தொகுதியில் மரக்கறி வியாபாரிகள் நிலத்திலே பரப்பியவாறு மரக்கறிகளை விற்பனை செய்வதைக்கண்டு அது எமக்கு சுகாதாரத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதையும் கருத்தில் கொண்டு கட்டிடத்தை விஸ்தரிப்பதற்கான நடவடிக்கையின் ஆரம்பமாக இப்பொழுது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இப்போது எமது நாட்டிலே மிகவும் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கின்ற விடயம் உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பானது.

கடந்த காலங்களில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் தேர்தல்கள் நடைபெற்றன. இந்த விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் அந்தப்பகுதியினுடைய மக்களுக்கும் உறுப்பினர்களுக்கும் இடையே ஒரு நீண்ட இடைவெளி காணப்படுவதை கருத்திலே கொண்டு அடுத்த முறை நடைபெறவிருக்கின்ற இந்த தேர்தலானது வட்டார முறையிலே அமைப்பதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பித்து அதற்கான சட்டமானது நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

எனவேதான் அடுத்த உள்ளுராட்சிசபைத் தேர்தலானது வட்டார முறையிலும் விகிதாசார பிரதிநிதித்துவம் கலந்த முறையிலும் நடைபெறவிருக்கின்றது.

வட்டார பிரதிநித்துவமுறை மூலம் குறிக்கப்பட்ட சில வட்டாரங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. வட்டாரத்தில் வசிக்கின்ற தெரிவு செய்யப்படுகின்ற பிரதிநிதிகளைக்கொண்டு எதிர்காலத்திலே இந்த உள்ளுராட்சி மன்றங்கள் அதனுடைய சேவைகளை மேம்படுத்துவதற்கான நடைவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

உள்ளுராட்சி என்று சொல்லப்படுகின்ற நிறுவனங்களானவை ஏனைய நிறுவனங்களைப்போல அல்லாது தாமாகவே தமது நிதிகளை சம்பாதித்து அவர்கள் எவ்வளவு அதனுடைய பெறுமானத்தை வருமானமாக ஈட்டிக்கொள்கிறார்களோ அந்த அளவிற்கு அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப வரவு செலவு திட்டங்களை தயாரித்து அவர்களுக்குரிய அபிவிருத்தி திட்டங்களினை முன்னெடுக்க முடியும்.

அந்த வகையிலே ஏறாவூர்ப் பற்று பிரதேச சபையானது வருமானங்கள் மூலம் பெற்றுக்கொண்ட தமது சொந்த நிதியிலே இருந்துதான் இப்பொழுது 4.6 மில்லியன் ரூபா செலவிலே புதிய சந்தைக்கட்டிடம் அமைக்கப்டவிருக்கின்றது.” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com