அரசியலமைப்பு குழப்பத்தில் மலையகத்தின் நிலை?

0
26

தேசிய அரசாங்கத்தின் பிரதான தேர்தல் வாக்குறுதிகளில் முதன்மையாக அமைந்தது புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களின் மீள்கட்டமைப்பு ஆகியவையாகும். இவ்விடயம் சிறுபான்மை மக்கள் மட்டுமன்றி கற்ற சிங்களச் சமூகமும் வரவேற்கக்கூடிய நிலைப்பாட்டை அடைந்ததற்கு காரணம் மோசடி மிகுதியாலும், வரம்பு மீறிச் சென்ற ஊழல், இனத்துவேஷம், பாகுபாடு போன்ற காரணங்களாலும் நாடு சின்னாபின்னமாகி இருந்தமையாகும்.

ராஜபக் ஷக்களின் அதிகார மையம் தேசிய அரசின் கைக்கு வந்தவுடன் தமிழ் மக்களும் சற்றே நிம்மதி அடைந்தனர். வடகிழக்கு மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளும் தேசிய அரசின் பக்கம் நின்று ஒத்துழைக்கவும் தயாராகின. ஆனால் விளைவு வேறுவிதமான பெறுபேற்றை தந்துவிட்டது.

மைத்திரி அரசு அளித்த வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தும் போது சில சிக்கல்கள் இருப்பதை காண முடிந்தது. காரணம் எவ்வாறு வாக்குறுதிகள் அளித்தாலும் இந்நாட்டில் சில வரையறைகளுக்குட்பட்டே செயற்பட முடியும் என்பதை மைத்திரி ரணில் அரசு அனுபவ ரீதியாக உணர்ந்தது. சில சமயம் உணர்த்தப்பட்டது. இவ்விடயத்தில் சிறுபான்மை மக்கள் சார்ந்து எடுக்கப்படும் தீர்மானங்கள் எப்போதும் பல்வேறு இனவாத தூற்றல்கள், சர்ச்சைகள் என்பவற்றைக் கடந்தே ஓய்வுப் பெருகின்றமை நாம் அறிந்ததே.
அந்த வகையில் இந்நாட்டிற்கான புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் அதிகார பரவலாக்கத்திற்கு சென்று இனப்பிரச்சினைக்கு தீர்வை எட்டலாம் என்று மைத்திரி அரசு நினைத்தது. இச்சிந்தனைக்குச் சாதகமாக வடக்கில் தமிழ் கூட்டமைப்பும் மற்றும் ஏனைய சிறுபான்மைக் கட்சிகளும் தம்முடன் இருப்பதாகவும், இச்சூழலைப் பயன்படுத்தி தமிழர்களின் வரலாற்றுப் பிரச்சினைக்கு முடிவு காணலாம் எனவும் எண்ணினர். இவ்விடயத்தில் தலை தூக்கிய பௌத்த தேசியவாதம் சர்ச்சையை உண்டுபண்ணி இன்று பூதாகரமாக இப்பிரச்சினையை மாற்றியமைத்துள்ளது.

அடிப்படைவாதிகள் கூறுவதுபோல் என்றுமே ஒற்றையாட்சி தன்மை மாறாது என்றும், சமஷ்டியின் மூலம் நாடு பிளவுபடும் என்றும் அடிமட்ட சிங்கள மக்கள் மத்தியில் அபிப்பிராய உருவாக்கம் நூதனமாக செய்யப்படுகிறது. அதேபோல் பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் பௌத்த மதமே முதன்மை அந்தஸ்துக்கு உட்பட்டது என்றும், மாகாண அதிகாரங்கள் ஆளுநர் மூலம் ஜனாதிபதியின் கீழ் வரவேண்டும் என்றும் , ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் நீக்கப்படக்கூடாது என்றும் இன்று மகாசங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றும் அளவிற்கு சிங்கள அடிப்படைவாதம் இப்பிரச்சினையை பரவலாக்கியுள்ளது.

அரசியலமைப்பில் 19 ஆவது திருத்தம் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்களின் சேவையை உறுதிப்படுத்துமாறு அமைந்தவிடத்தும் நடைமுறையில் மக்கள் முழுயைமாக அச்சுதந்திரத்தினை அனுபவிக்க முடியாத நிலை அரசாங்கத்தின் இயலாமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக சுட்டிக்காட்டப்படுகிறது. அதேபோல் சிறுபான்மை இனங்கள் சம்பந்தப்பட்ட யாப்புத் திருத்தங்களும் வெறும் வாய் வார்த்தைகளுக்குள் முடிந்துவிடும் அபாயம் இருக்கின்றது.

புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில் மைத்திரி அரசு மக்களின் விருப்பத்தினை அளவிடுமாறு நாடளாவிய ரீதியில் மக்கள் கருத்தறியும் அமர்வுகளை ஏற்பாடு செய்து சிவில் சமூகத்தின் அபிலாஷைகள் குறித்து பதிவு செய்துகொண்டு அதன் பின் அரசியலமைப்பு குழுவுக்கு பரிந்துரைகளை முன்வைக்குமாறு கேட்டுக் கொண்டது. இவ்விடத்தில் மலையகத்தை முன்னிறுத்தியும், சிவில் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தமது முன்மொழிவுகளை வழங்கியிருந்தன. எனினும் வட, கிழக்குக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் மலையக தேசியம் குறித்த சிந்தனைக்கு அளிக்கப்படவில்லை.

இவ்விடயம் குறித்த தெளிவு மலையக மக்கள் மத்தியில் ஏற்படாமலிருக்கச் செய்யும் செயற்பாடுகளும் அரசிடம் தாராளமாகவே இருந்தன. காரணம் வடகிழக்கு தமிழர்கள் தொடர்பாக பேசும்போது அதிகாரப் பரவலாக்கம், மாகாண சபைகளின் அதிகாரம், சமஷ்டி தீர்வு போன்ற கருத்தாடல்களே முக்கியத்துவம் பெறப்பட்டன. எனினும் வடகிழக்கிற்கு வெளியே வாழும் சிறுபான்மையினரின் இருப்பு குறித்தும் காணி உரிமைகள், தொழில், கல்வி, போன்ற விடயங்கள் குறித்தும் பெரிதாக பேசப்பட வில்லை. வடகிழக்கிற்கு அடுத்தபடியாக மலையக மக்களே இந்நாட்டில் குறிப்பிடத்தக்களவு சனத்தொகையைக் கொண்ட இனக்குழு என்ற அடிப்படையில் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

அதுவும் அரசியலமைப்பில் ஏற்படுத்தப்படும் பாதுகாப்பு, இருப்பு என்பன இனக் கலவரங்களாலும் ஒடுக்குமுறையாலும், சுரண்டலாலும் பாதிக்கப்பட்ட எம்மை போன்ற ஒரு இனக்குழுவுக்கு அவசியமான தேவையாகும். இன்றைய சூழலில் இவ்விடயங்களுக்கு இரண்டாம் அந்தஸ்தை வழங்கி, ஜனாதிபதியின் அதிகாரங்கள், தேர்தல் முறை மாற்றம், ஒற்றையாட்சி போன்ற பெரும்பான்மை மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெறத்தக்க விடயங்களை மகாசங்கத்தினரும் ஜனாதிபதி, பிரதமர் போன்றோரும் பேசிக்கோண்டிருப்பதால், மலையக் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் எங்கே கிடைக்கப்போகின்றது என்ற ஐயப்பாடு மலையக மக்கள் மத்தியில் எழுந்திருப்பது நியாயாமானதாகும். அது மட்டுமன்றி இந்நாட்டில் தமிழர் பிரச்சினை என்றால் அது வட கிழக்கில் மட்டும்தான் என்ற அபத்தமான விளக்கமும் நாட்டினுள்ளும், சர்வதேசத்திலும் ஏன் இந்தியாவிலும் கூட ஏற்படுத்தப்பட்டு மலையகம் மறக்கப்பட்டுள்ளது.
மலையக தேசியம் குறித்து பரந்துபட்ட விளக்கமின்மையும் அரசியல் பேதங்களால் ஒன்றாக குரல் கொடுக்கும் நிலையில் நாம் அனைவரும் இல்லாததையும் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். யாப்புத் திருத்தத்தில் எம் மக்களின் இருப்பை உறுதிப்படுத்தும் சரத்துகள் உள்வாங்கப்பட வேண்டும் என்றும், காணி உரிமைகள் குறித்த தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் குத்தகைகள் கூலிகள் என்ற நிலைமையில் இருந்து நாம் விடுபடும் வரை குரல் கொடுக்க வேண்டும். அதாவது பெருந்தோட்ட மக்களின் தொழில், இருப்பிடம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்கும் அரசாங்கமே பொறுப்பு எனும் நிலை யாப்பு ரீதியாக ஏற்படுத்தப்பட வேண்டும். எனினும் நாம் இது குறித்து இன்னும் சிந்திக்கத்தலைப்படவில்லை. ஒரு சில அரசியல் கட்சிகள் யாப்பில் உள்ளடக்க முடியாத அற்ப விடயங்களை அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் பேசி தங்கள் சமூக அறிவை அப்பட்டமாக வெளிப்படுத்தியதுதான் எமக்கு கிடைத்த வரப்பிரசாதம்.

அதேபோல் தேர்தல் முறை மாற்றத்திற்கு மகாசங்கத்தினர் ஒப்புதல் அளித்திருக்கின்றனர். அதாவது பிரதேசவாரி பிரதிநிதித்துவம் நீக்கப்பட்டு விகிதாசார பிரதிநிதித்துவம் ஏற்படுத்தப்படும் என்று சில கருத்துகள் முன் வைக்கப்பட்டுள்ளன அல்லது கலப்பு முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுவும் மலையகத்தைப் பொறுத்தவரையில் பாதகமான விடயமே ஆகும். இப்போது எமக்கிருக்கும் பாராளுமன்ற ஆசனங்கள் கூட எட்டாக்கனியாகி விடும் அபாயம் இங்கு இருக்கின்றது. இன்று நாம் அனுபவிக்கும் வரப்பிரசாதங்களை நாம் இழந்துவிடுவோம் என்ற கவலையாவது எமது பிரதிநிதிகளுக்கு ஏற்பட வேண்டும். மலையக தேசியம் குறித்து கற்ற சமூகம் தனது சமூகக் கடமையை நிறைவேற்றத் தயாராக வேண்டும். அரசியல் யாப்பில் மலையக மக்கள் தனியான அலகாக கருதப்பட்டு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் எனும் குரல் உரத்து ஒலிக்க வேண்டிய தருணம் இது. எதிர்க்கட்சித் தலைமை தமிழராக இருக்கும் வேளையில்கூட நாம் தனித்து உரத்து குரல் கொடுக்க வேண்டும்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com